17 Aug 2013

'தலைவா' - இன்று உரிமை; நாளை ரிலீஸ் - அன்பழகன் அதிரடி!

'தலைவா' - இன்று உரிமை; நாளை ரிலீஸ் - அன்பழகன் அதிரடி! 

விஜய் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் படம் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 'தலைவா' படத்திற்கு என்னதான் பிரச்னை என்பது புரியாத புதிராக இருக்கிறது. 

'விஸ்வரூபம்' படத்தினைப் போன்று அரசாங்கம் படத்தினை வெளியிடத் தடை என்று அறிவிக்காத நிலையில், 'தலைவா'விற்கு என்ன பிரச்னை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

இந்நிலையில், அன்பு பிக்சர்ஸ் நிறுவனரும், தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், தனது டிவிட்டர் இணையத்தில், " 'தலைவா' படத்தினை எங்களுக்கு (அன்பு பிக்சர்ஸ்) கொடுத்தால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயார்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சந்தோஷம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அன்பழகனிடம் பேசினோம். " 'ஆதிபகவன்' படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆகையால் தான் எனது டிவிட்டர் இணையத்தில் 'தலைவா' படத்தினை எங்களுக்குக் கொடுத்தால் வெளியிடத் தயார் என்று கூறினேன்.

வெளிநாடு, வெளிமாநிலங்கள் என படம் வெளியானாலும், எனக்குக் கவலையில்லை. இப்போதெல்லாம் படம் வெளியான அன்று, படத்தின் சி.டி. பர்மா பஜாரில் கிடைக்கிறது. எனவே, இணையத்தில் வெளியானது பற்றியும் நான் கவலைப்படவில்லை. 'தலைவா' மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இன்று காலை முதலே, எனக்குத் தெரிந்த ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர்களிடமும் பேசி வருகிறேன். அவர்களும் 'கண்டிப்பாக வாங்குங்கள், வெளியிடத் தயாராக இருக்கிறோம்' என்று தெரிவித்து வருகிறார்கள். ஆகையால், எனக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

அரசாங்கம் படத்திற்கு எவ்வித தடையையும் விதிக்கவில்லை. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களும் படத்தினை வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். பிறகு ஏன் நான் கவலைப்பட வேண்டும்? 'தலைவா' வெளியீட்டு உரிமை இப்போது எனக்கு வந்தால் கூட படத்தை நாளை காலை ரிலீஸ் செய்ய முடியும்.

அதற்காக நான் வேந்தர் மூவிஸுக்குப் போட்டியாகச் செயல்படுகிறேன் என்றில்லை. அவர்களால் முடியவில்லை என்றால் மட்டுமே கொடுங்கள், நான் வெளியிடுகிறேன் என்றுதானே கூறுகிறேன். 

ஒரு சில நபர்கள் விஜய் கால்ஷீட் தேதிக்காக பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். விஜய்யிடம் கால்ஷீட் குறித்து இதுவரை நான் பேசியதில்லை. நான் வேறு ஒரு முன்னணி இயக்குனரிடம் பேசி வருகிறேன். அவருடைய பணிகள் முடிந்தவுடன், எனது அன்பு பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் செய்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இப்போது சொல்கிறேன்... நான் யாருடனும் போட்டி போடவில்லை. தயாரிப்பாளர் என்கிற முறையில் உதவி செய்கிறேன். என்னிடம் படத்தினைக் கொடுத்தால், நாளை வெளியிட என்னால் முடியும்" என்று அடித்துச் சொல்கிறார் அன்பழகன்.

'தலைவா' படத்தின் தயாரிப்பாளர் என்ன முடிவு செய்ய இருக்கிறாரோ?
-vikatan 

தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

தலைவா படத்தை வெளியில் கொண்டு வர பல தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் விஜய் தரப்பினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை. முதல்வரைச் சந்தித்து படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்கத் திட்டமிருந்தது விஜய் தரப்பு. ஆனால் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் வந்துவிட்டதாம்.

அடுத்து ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று கூறப்படும் மூத்த பத்திரிகையாளரைச் சந்தித்து உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரோ, தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் என்றும் பதில் கூறி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மூலம் முதல்வரிடம் பேச படத்தை வெளியிடும் தரப்பில் முயற்சித்ததாகவும், அதற்கு, இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு எதற்காக வரிச் சலுகை கேட்கிறீர்கள் என முதல் சந்திப்பிலேயே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். 
 
தலைவா விஷயம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை முதல்வர் என்ற நிலையில், இப்போது இன்னொரு முக்கிய தலைவர் மூலம் முதல்வரை அணுக முயற்சித்து வருகிறார்களாம் படத்தின் வெளியீட்டாளர்கள்.

---Movie updates

பிரியாணி பாடல்களை சோனியே லீக் செய்தது அம்பலம்- எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!

பிரியாணி பாடல்களை சோனியே லீக் செய்தது அம்பலம்- எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!

பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களையும் பப்ளிசிட்டிக்காக சோனியே வெளியிட்ட ரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கார்த்தி - ஹன்சிகா நடித்துள்ள பிரியாணி படத்துக்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இது யுவனின் 100 வது படம் என்பதால், படத்தின் பாடல்களை அவரது பிறந்த நாளான ஆக 31-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்றே பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகிவிட்டன.


இதுகுறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது, பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனமே என்பது தெரிய வந்துள்ளது. ரஜினி நடித்த சிவாஜி படத்திலிருந்துதான் இந்தப் போக்கு ஆரம்பமானது. அந்தப் படத்தின் ஒரு கூடை சன் லைட் பாடலை இப்படித்தான் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினர். அதன் பிறகு பல பெரிய படங்களின் பாடல்கள் அல்லது வீடியோக்களை தயாரிப்பாளர்கள் அல்லது இசை வெளியீட்டு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்களே வெளியிடுவதும், பின்னர் போலீசில் புகார் செய்து ஸ்டன்ட் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்த முறை இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரியாணி படத்தின் அத்தனைப் பாடல்களையும் பாடலின் வெளியீட்டு உரிமை பெற்ற சோனி நிறுவனமே வெளியிட்டுவிட்டது. ஆனால் இது தெரியாமல் அல்லது காட்டிக் கொள்ளாமல் "அப்படியே ஷாக்காகிட்டேன்," என்று கூறியுள்ளார் யுவன்.

 ஏன் இப்படி? எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். இன்னொரு முக்கிய விஷயம், இந்தப் பாடல்களை இணையத்தில் டவுன்லோடு செய்வதன் மூலம் பாடல் வெளியிடும் நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது என்கிறார்கள். தங்களுக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என யாருமே அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கின்றனர். இல்லாவிட்டால் இந்நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் பிரஸ் மீட் கூட்டியிருப்பார்களே.. ஆனாலும் யுவனுக்காக அவரது பிறந்த நாளன்று பாடல் வெளியீட்டை நடத்தப் போகிறார்களாம்!

16 Aug 2013

விஜய்க்கு போன் செய்த அஜீத் தலைவா குறித்து விசாரிப்பு

விஜய்க்கு போன் செய்த அஜீத் தலைவா குறித்து விசாரிப்பு...

தலைவா படம் குறித்த பரபரப்பு நாளுக்கு நாள் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் படம் வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது இப்போது. விஜய்யின் உண்ணாவிரதம் மறுக்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? விஜயகாந்த் இவருக்காக களம் இறங்குவாரா போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் மிக மிக சைலண்ட்டாக அந்த சம்பவமும் நடந்ததாம். 

நடிகர் அஜீத் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யிடம் போனில் பேசியதாகவும், எதற்கும் டென்ஷன் ஆகாமல் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாகவே முதல்வர் ஜெயலலிதாவின் அனுதாபி என்று கருதப்படுகிறவர் அஜீத். அதற்காக இந்த தலைவா விஷயத்தில் அவர் களமிரங்க மாட்டார். ஏனென்றால் அடுத்தவர்களுக்காக சிபாரிசுக்கு செல்வது அஜீத்திற்கு பிடிக்காத விஷயம் என்பது அவரை அறிந்தவர்களுக்கு புரியும். எனவே இந்த விசாரிப்பும் அனுதாப ஆறுதலும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டுமே என்றும் கூறுகிறார்கள் திரையுலகத்தில். 

எதிரி யார் என்றே தெரியாமல் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
அதுதான் புரியாத புதிர். 

6 Aug 2013

'தலைவா'வுக்கு கிடைத்த வெற்றி!

'தலைவா'வுக்கு கிடைத்த வெற்றி!

இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மிகவும் எதிர்பார்ப்புடன் கூடிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தலைவா', தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi', இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் தான் அவை.

மூன்று படங்களுமே அதிக பட்ஜெட்டில் தயாராகி இருப்பதோடு, மூன்றுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பவை.

இந்தப் போட்டியில் இருந்து திடீரென பவன் கல்யாணின் 'Atharintiki Daredi' விலகியிருக்கிறது. தனித்தெலுங்கானா பிரச்னையால் ஆந்திரா முழுவதும் அதிரிபுதிரியாகிக் கிடக்கிறது.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்திருக்கிறார்கள். ரிலீஸ் எப்போது என்பதை விரைவில் அறிவிப்பார்களாம்.

இந்த அறிவிப்பால், 'தலைவா' படக்குழு ஏக உற்சாகத்தில் இருக்கிறதாம். காரணம், வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளை பவன் கல்யாண் படத்துக்காக ஏற்கெனவே புக் செய்து வைத்திருந்தனர்.

இப்போது அந்தப் படம் ரிலீஸாகாததால், அந்தத் திரையரங்குகள் 'தலைவா'வுக்குக் கிடைத்திருக்கிறதாம்.

அதுபோலவே பெங்களூரில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் படத்துக்குத்தான் அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டதாம். அந்த ஸ்கிரீன்களையும் இப்போது 'தலைவா' கைப்பற்றி இருக்கிறது.