17 Jun 2013

உலகம் சுற்றும் பலூன்கள் மூலம் இண்டர்நெட் : கூகுளின் பிரமாண்டத் திட்டம்.

உலகத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி கிடைத்துவிட்டதாக ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இன்னும் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையைப் போக்கி மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்டை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

மிகுந்த அழுத்தமுடைய வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும் பலூன்கள், பாலி எத்திலீனால் உருவாக்கப்பட்டவை. சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் தகடுகள், அதி நவீன கணினியில் இருக்கக்கூடிய மின்னணுப் பொருள்கள் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.

 சரி, இந்த பலூனால் என்ன நன்மை? காற்றில் இது கிழிந்துபோய்விடாதா? வானூர்திகளுக்கு ஆபத்து ஏற்படாதா என்பன போன்ற கேள்விகள் எல்லாம் எழக்கூடும். ஆனால், மழை பொழிவது, மலை முகடுகள், வானூர்தியின் வழித்தடம் எல்லாம் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான். இந்த பலூன் தரையில் இருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் ஸ்ட்ரடோஸ்பியர் அடுக்கில்தான் பயணிக்கப்போகிறது. இந்தப் பகுதியில் காற்றின் வேகம் 8 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மிகச் சீராக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். உலகம் முழுவதும் இருந்து இதுபோன்ற நூற்றுக்கணக்கான பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.

இவற்றில் உள்ள ஆன்டெனா, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இதனால், பலூன் எந்தப் பக்கம் பறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த பலூன்கள் ஒன்றுடன் ஒன்று கம்பியில்லா வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் பூமியில் உள்ள இண்டர்நெட் சர்வர்களுடன் இணந்திருக்கும். இதனால், இந்த பலூன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட புதியவகை செயற்கைக்கோள்கள் போலச் செயல்படத் தொடங்கும்.

வீடுகளில் பிரத்யேக ஆண்டெனாக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பலூன்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும். ஒரு பலூன் 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இண்டர்நெட் சேவையை அளிக்கும் திறன் கொண்டது என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் நியூலாந்தில் இருந்து சுமார் 40 பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேடுபொறி சேவைக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிகப் பெரிய திட்டம் என்று கூறப்படுவதால், இதற்கு உலகமெங்கும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.
  
Project Loon: The Technology(video)




---Movie updates    

No comments: